வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம்

அரபிக் கடலில் உருவாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகியவற்றால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக, ஒடிஸாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 720 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதி வழியாக கடக்க வாய்ப்பு உள்ளது.
லூபன் புயல்: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, லூபன் புயலாக மாறி, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் மினிகாய் தீவில் இருந்து 1,300 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஓமன்-ஏமன் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை தாமதம்: அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகியவற்றால், அரபிக்கடல், தென்னிந்திய பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் போக்கு, ஈரப்பதம் ஆகியவற்றில் மாற்றம் காணப்படுகிறது. இதனால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகியவற்றின் தாக்கம் நிறைவடைந்த பிறகே வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.
மிதமான மழை: தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகரில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.
திருபுவனத்தில் 150 மி.மீ.: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 130 மி.மீ., மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டியில் 120 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 90 மி.மீ., பரமக்குடியில் 80 மி.மீ., விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, திருப்பூரில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய அரபிக்கடலில் லூபன் புயல் உருவாகியுள்ளதால், மத்திய மேற்குவங்கக் கடல் பகுதிக்கு அக்டோபர் 12 -ஆம் தேதி வரையிலும், தென் மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுதவிர, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளதால், மத்திய வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு வரும் 10 -ஆம் தேதி வரையும், வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 9 முதல் 11 -ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்; ஆழ்கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.