தீபாவளியையொட்டி விபத்து இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக அனைத்து தலைமை பள்ளி ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர்
கூறியிருப்பதாவது:-


தீபாவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்தவேளையில் கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். விபத்துகள் இல்லாமல் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளியை கொண்டாட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* பட்டாசுகளை வெடிக்கும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிருங்கள்.

* எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.

* பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.

* பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டு வெடிக்க வேண்டாம்.

* மூடிய பெட்டிகளில், பாட்டில்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது.

* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில், குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே வெடிக்க வேண்டும்.

* பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும், குறுகிய தெருக்களிலும் வெடிக்காதீர்கள்.

* பட்டாசு விற்பனை செய்யும் கடைக்கு அருகில் வெடிக்க கூடாது.

* குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர் பாதுகாப்பில் வெடிக்க வேண்டும்.

* நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

* விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

* பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க செய்யாதீர்கள்.

* அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது