யு.டி.எஸ்., 'மொபைல் ஆப்'பில் ரயில் டிக்கெட் பெற புதிய வசதி

சென்னை: முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் பெறும், யு.டி.எஸ்., என்ற, 'மொபைல் ஆப்'பில், ரயில் நிலையத்துக்குள் இருந்தபடியே, டிக்கெட் எடுக்கும் வகையில், 'க்யூ.ஆர்., கோடு' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர், பிரியம்வதா விஸ்வநாதன் கூறியதாவது:ரயில் நிலையங்களில், பயணியர், வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் வகையில், ரயில்வே வாரியம், யு.டி.எஸ்., என்ற, முன்பதிவில்லாத டிக்கெட் சேவைக்கான, 'மொபைல் ஆப்'பை, பல மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக, காகிதம் இல்லாத டிக்கெட்டை, மொபைலில் பெற முடியும்.இந்த வசதியால், புறநகர் ரயிலில் பயணிப்பதற்கு மட்டுமின்றி, நகரங்களுக்கு இடையே பயணிப்பதற்கான, டிக்கெட்டையும் பெற முடிகிறது. இதன்படி, ரயில் நிலையம் அல்லது தண்ட வாளத்தில் இருந்து, 5.8 மீட்டர் தொலைவில் இருந்து தான், டிக்கெட் எடுக்க முடியும்.தற்போது, புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே, மொபைல் ஆப் வழியாக, டிக்கெட் பெறுவதற்காக, 'க்யூ.ஆர்., கோடு' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியில், ரயில் நிலையத்தில் இருந்தும் டிக்கெட் பெறலாம்.பிற மண்டலங்களை விட, தெற்கு ரயில்வே மண்டலம், யு.டி.எஸ்., வழியே டிக்கெட் பெறுவதில் முன்னோடியாக உள்ளது. இதுவரை, 5 சதவீத டிக்கெட், யு.டி.எஸ்., வழியாக பெறப்பட்டுள்ளது. இதை, இந்தாண்டு இறுதிக்குள், 10 சதவீதமாக உயர்த்த, புதிய, 'க்யூ.ஆர்., கோடு' முறையை அறிமுகம் செய்துள்ளோம்.மேலும், தீபாவளிக்காக, 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு முதல் நாள், முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசலுக்கு ஏற்றவாறு, கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டுக்கு பயணியர் விரைவு ரயில் இயக்குவது தொடர்பாக, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.