முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் பள்ளிகளில் தண்ணீர் பரிசோதனை போட்டி

மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு, தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மத்திய - மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகளில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 


தேசிய அளவில், தண்ணீர் பரிசோதனை திறன் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., வழியாக, பள்ளிகளில், இந்த போட்டிகள் நடத்தப்படும். தமிழகத்தில், மொத்தம், 402 பள்ளிகளில், கலாம் பிறந்த நாளில், அறிவியல் மற்றும் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர், நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட பள்ளி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், '402 வட்டாரங்களில், தலா, ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, தேசிய போட்டிக்கு அனுப்பப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.இந்த திட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஏரி அல்லது குளத்து நீர், நிலத்தடி நீர் என, மூன்று வகையான நீர் மாதிரியை பயன்படுத்தி, மூன்று வகை பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையில் உள்ள மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம்.