மாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

திருவாரூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 70 விழுக்காடு தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது தனியார் கல்லூரி ஆசிரியர்களின் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திருவாரூரில் உள்ள அஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அக்-13ஆம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெறுவதை உறுதி படுத்த வேண்டும். மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாது என்று எச்சரித்துள்ளது. ஒரு செமஸ்டரில் மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் கல்லூரி நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வரை அவர்களின் ஊதிய உயர்வு கிடையாது. அடுத்த செமஸ்டரிலும் இலக்கை அடையாவிட்டால் அவர்களுக்கு 1 மாத சம்பளம் அளித்து வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக அந்த கல்லூரியின் முதல்வர் எஸ்என்.ராமசாமி கூறுகையில்,மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருகிறது. 70 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார். இதற்கான காரணம் என்னவென்றே ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலிடம் ( All India Council for Technical Education-AICTE) கேட்டபோது அப்படிப்பட்ட ஒழுங்குமுறை எதுவும் கவுன்சிலில் இல்லை என்று கூறியுள்ளது