அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புது தில்லி: அக்டோபர் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 7ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எச்சரிக்கை தற்போது திரும்பப்பெறப்பட்டது.
எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6ம் தேதி - தமிழகம், புதுவை, லட்சத்தீவுகள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். அந்தமான், நிகோபார் கர்நாடகாவின் உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும்.
அக்டோபர் 7ம் தேதி - தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்யும் என்றும், மேலும், லட்சத்தீவுகள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான கன மழை பெய்யும். அந்தமான், நிகோபார் கர்நாடகாவின் உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும்.
முன்னதாக அக்டோபர் 7ம் தேதி குறைந்த நேரத்தில் அதி கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8ம் தேதி - தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் கன மழை பெய்யும்.
அக்டோபர் 9ம் தேதி - தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளாவில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.
அக்டோபர் 10ம் தேதி - மழைக்கான வாய்ப்பு இல்லை. காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கி.மீ. வேகத்தில் இருக்கும். கடல் வானிலை மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.