டி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமல், டி.இ.ஓ.,க்கள், 'டிமிக்கி' கொடுப்பதால், அரசு பள்ளி ஆசிரியர்கள்அதிருப்தியில்உள்ளனர்.தமிழகத்தில்
உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய வகுப்பறைகள் கட்டவும், மத்திய அரசின், ஒருங்கிணைந்த கல்வி இயக்க திட்டத்தில், நிதி ஒதுக்கப்படுகிறது.


'தேவைக்கேற்ப, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தலாம்' என, பள்ளி கல்வித்துறைக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் உதவியை பெற்று, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ,க்களுக்கு, பள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அரசு பள்ளிகளை, அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அவற்றின் தேவை குறித்து, டி.இ.ஓ., - சி.இ.ஓ.,க்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், தனியார் நிறுவனங்களை அழைத்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு ஒப்புதல் அளிக்கும். ஆனால், அரசு பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்வதற்கு பதிலாக, தனியார் பள்ளிகளை தேடி, அப்பள்ளிகளுக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். பல அரசு பள்ளிகள் மற்றும் வளாகங்கள், கழிவறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் வசதி செய்வது, நுாலகம் அமைப்பது, விளையாட்டு மைதானங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றுவது போன்ற வசதிகளுக்காக, தவித்து வருகின்றன. இவற்றில், டி.இ.ஓ.க்கள் ஆய்வு செய்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்