சிவகங்கை மாவட்டம் வடக்கு தமறாக்கியில் பள்ளி நடத்தும் கிராம இளைஞர்கள்!!!

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, மழலையர் பள்ளியை கிராம இளைஞர்களே நடத்தி வருகின்றனர்.

வடக்கு தமறாக்கியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. தனியார் பள்ளி மோகத்தால் மாணவர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியது. இதை தடுக்க, கிராம இளைஞர்கள் தமறாக்கி நாட்டு வேங்கைகள் என்ற பெயரில் 'வாட்ஸ்ஆப்' குழுவை துவங்கினர். இதன் மூலம் பணம் வசூலித்து பள்ளியை சீரமைத்து, வர்ணம் அடிப்பது, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், புரஜெக்டர் உள்பட வசதிகளை செய்தனர்.



மேலும் மழலையர் பள்ளியை நடத்தி வருகின்றனர். அங்கு 37 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கும் தேவையான வசதிகள், நோட்டு, புத்தகங்கள் வாங்கி கொடுத்தனர். இங்கு பணியாற்றும் மூவருக்கு ஊதியமும் வழங்குகின்றனர். இதனால் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது 113 பேர் படிக்கின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறியதாவது: மழலையர் பள்ளி துவங்கியதால், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தடுக்கப்பட்டது. பள்ளி வளர்ச்சிக்காகவே 'வாட்ஸ்ஆப்' குழுவை ஏற்படுத்தினோம். 60பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலுள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர். நடுநிலைப் பள்ளியும் தனியாருக்கு நிகராக மாற்றப்பட்டு வருகிறது, என்றார்.