ஆசிரியர் தினத்தன்று அரசு பள்ளிக்கு சீர்வரிசை

கோபிசெட்டிபாளையம்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், சீர்வரிசை பொருட்கள், இரு மாட்டு வண்டிகளில், எடுத்து செல்லப்பட்டு, அரசு
பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கோபிபாளையத்தில், துாய திரேசாள் முதனிலைப் பள்ளி என்ற, அரசு நிதியுதவி பள்ளி உள்ளது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 200 குழந்தைகள் பயில்கின்றனர்.தலைமையாசிரியர் மற்றும் எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளியின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், நிரந்தர நன்கொடையாளர்கள் இணைந்து, ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில், பள்ளிக்கு சீர் வரிசை வழங்கும் விழா நேற்று நடந்தது.'டிவி'க்கள், பிளாஸ்டிக் சேர்கள், தோட்டக்கருவி மற்றும் துப்புரவு பொருட்களுடன், ஆசிரியரை பாராட்டி கவுரவிக்க பரிசுகள் உட்பட, 2 லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசை பெருட்களை வாங்கினர். இவற்றை, இரு மாட்டு வண்டிகளில் நிரப்பி அலங்கரித்தனர். ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, சீர்வரிசை நிரம்பிய இரு மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக, பள்ளிக்கு எடுத்து சென்றனர்.