உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு!

 


12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்ற ஆண்டு முதல் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக கல்வித்துறை. 11 மற்றும் 12-ம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 1,200 மதிப்பெண்களை ஆண்டுக்கு 600 மதிப்பெண்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்ற ஆண்டு 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன், 'மேல் படிப்புக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், 12-ம் வகுப்பு மதிப்பெண்களே எடுத்துக்கொள்ளப்படும்" என அறிவித்திருந்தார். இதுகுறித்து, கல்வியாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர். இந்நிலையில் நேற்று, ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்றிருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
அம்மனுவில், "தற்போது ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் வசதிபடைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கே நன்மை கிடைக்கும். இதனால், ஏழை மக்களின் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ப்ளஸ் 1 மதிப்பெண்களையும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள், 50 விழுக்காட்டுக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனரே என்று கவலை தெரிவித்ததோடு, எங்களின் முடிவுக்குப் பலர் நன்றி தெரிவித்துள்ளதையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.