குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.10.2018 புரட்டாசி 24ஆம் நாள் விடியற்காலை 3.16க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்


வாக்கிய பஞ்சாங்கபடி (இதுதான் கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது ) விளம்பி வருடம் 4.10.2018 புரட்டாசி 18 ஆம் நாள் இரவு 10.11 க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு

இதுவரை துலாம் ராசியில் குரு இருந்து வந்தார் துலாம் குருவுக்கு பகை வீடாகும்..

இதனால் நாட்டில் நீதி ,சட்டம்,வங்கி,கல்விதுறை,கோயில்கள் சார்ந்த ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன…

சிலை கடத்தல்,கோயில் உற்சவர் மாறாட்டம்,வங்கியில் மோசடி,நீதி துறையில் குழப்பங்கள் என நடந்து வந்தன..ஆகம விதிகளும் மீறப்பட்டன என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

குரு இப்போது விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் அது குருவின் நட்பு வீடு ..

குரு இங்கு தன் சொந்த வீடு போல பலன்கொடுக்கும்..குருவுக்கு பலம் கிடைத்தால் நீதியும் தர்மமும் காப்பாற்றப்படும் குருவின் காரகத்துவங்கள்சிறப்படையும்..

கல்வி,கோயில்,வங்கி,நீதி சம்பந்தமான துறைகளில் ஒழுங்கு உண்டாகும்..


குரு பெயர்ச்சி மட்டுமே நம்மை இயக்குவதில்லை.உங்கள் சொந்த ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை..நடக்கும் திசா புத்தி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியும் நம்மை வழிநடத்துகிறது....

அஷ்டம சனி நடப்போருக்கு குரு பெயர்ச்சி ஒரு நிழல் தரும் மரமாக இருந்து ஆறுதல் படுத்துகிறது.....

மோசமான திசையால் விரயத்திலும்,நஷ்டத்திலும் இருப்போருக்கு கைகொடுக்கும் விதமாக குரு பெயர்ச்சி குரு பலம் சாதகமாக இருக்கும் ..

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கிறது..? யாருக்கெல்லாம் குரு பலம் வருகிறது..? 

ரிசபம்,கடகம்,துலாம்,மகரம்,மீனம் ராசியினருக்கு குருபலம் வருகிறது இந்த ராசியினருக்கு எல்லாம் குரு பெயர்ச்சி அதிக சாதகமாக இருக்கிறது..இந்த ராசியினர் குருவால் அதிக நன்மைகளை பெறுவார்கள் 
குரு பெயர்ச்சி  விபரம்...

குரு விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியானாலும் அவர் பார்வை மிக முக்கியம்...

குரு பார்வை கோடி தோசம் போக்கும் அல்லவா..? அப்படி அவர் எந்தெந்த ராசியை பார்க்கிறார் என பச்சை நிறத்தில் கொடுத்திருக்கிறேன்...குரு பார்வை பெறும் ராசிகள் உங்கள் ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து சில நன்மைகளை செய்வார் ...இன்னொரு பெரிய நன்மையும் உண்டு...குரு பார்வை பெறும் ராசிகளாக இருந்தாலும் சரி...குரு இப்போது விருச்சிகம் ராசியாக இருந்தாலும் அந்த ராசிக்கட்டத்தில் உங்கள் ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் இருந்தால் அதன் காரகத்துவம் பலம் அடையும்...

உதாரணமாக சுக்கிரன் விருச்சிகம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளில் இருந்தால் வீடு,கார்,ஆடை,ஆபரண சேர்க்கை ,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்..

செவ்வாய் அந்த ராசிகளில் இருந்தால் நிலம் வாங்கும் யோகம்,தொழில் அபிவிருத்தி உண்டாகும்..புதன் இருந்தால் தொழில் அபிவிருத்தி,கல்வி சிறக்கும்..சனி இருந்தால் தொழில் சிறக்கும்..


12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் 
                

ராசிகளில் முதல் ராசியில் பிறந்த நீங்கள் எதிலும் முதன்மையானவராக இருக்கவே விரும்புவீர்கள் வேகம்தான் உங்கள் பலம்..கடுமையான உழைப்பும்,சீற்றமும்,பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள் நீங்கள்..

ஆடு எப்படி எட்டாத உயரத்தில் இருக்கும் இலை தழைகளையும் எட்டி எட்டி பறித்து சாப்பிடுகிறதோ அதுபோல யாருக்கும் கிடைக்காத சில விசயங்களையும் தன் கடுமையான முயற்சியால் எட்டி பிடிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதால்தான் உங்கள் ராசியின் சின்னம் ஆடு படம் கொடுத்திருக்கிறார்கள்..

ராசிக்கு எட்டாம் இடத்திற்கு புரட்டாசி 25ஆம் நாள் குரு வருகிறார் ..ராசிக்கு நான்காம் இடத்தில் ராகு ஏற்கனவே உங்கள் சுகத்தை கெடுத்து கொண்டிருக்கும் நிலையில் அஷ்டம குரு என்ன செய்வாரோ என கலங்க வேண்டாம் அஷ்டம சனி காலத்தில் கடும் சூழலில் எவ்வளவோ தடைகளை சமாளித்த உங்களுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல...குரு பார்வை உங்களை காத்து நிற்கும்..

எட்டில் குரு வருமானத்தை தடங்கல் செய்கிறது அதிக விரய செலவுகளை கொடுக்கிறது..ஆனால் குருவின் பார்வையே அதை சரி செய்கிறது குரு நின்ற பலனை விட பார்வை பலன் அதிக நன்மைகளை செய்யும் என்பதால் குரு தன் ஏழாம் பார்வையால் உங்கள் தன ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக கெடுதல்களை செய்யாது வருமானம் சீராக இருக்கும்..

செலவுக்கு ஏற்ற வருமானம் வந்து சேரும்...தன் ஒன்பதாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால் சுகம் உண்டாகும் உடல் ஆரோக்யம் சீரடையும் தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்..

 உறவினர் வழியில் இருந்த பகைகள், தடைகள் விலகும்.குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தை பார்வை செய்வதால் வீண் விரயங்கள் கட்டுக்குள் இருக்கும்..

2019 பிப்ரவரியில் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் இன்னும் சில நன்மைகளையும் பெறுவீர்கள்...ராசிக்கு ஒன்பதில் சனி இருக்கிறார் குரு எட்டில் இருக்கிறார் சமூகத்தில் கெட்ட பெயர் உண்டாகாமல் இருக்க வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் இதனால் உறவுகள் பலப்படும்..

தந்தையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்..குலதெய்வம் கோயில் அடிக்கடி சென்று வாருங்கள்..முதியோர் இல்லங்கள் சென்று வரவும் உறவுகளில் பெரியவர்களிடம் ஆசி பெறுங்கள் திருச்செந்தூர் முருகனை ஒருமுறை தரிசனம் செய்து வரவும்..

ரிசபத்தானோடு தோரேல் ..ரிசபம் ராசிக்காரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என ஜோதிட பழமொழியே இருக்கிறது...பக்குவமான ஆட்களிடம் மட்டுமே பழக விரும்பும் பக்குவமான ஆட்கள்தான் ரிசபம் ராசியினர்.

எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என எப்போதும் யோசிப்பீர்கள். எதை செய்தாலும் அதில் நமக்கு என்ன பலன் இருக்கிறது என்பதில் தெளிவாக இருப்பவர் நீங்கள் ..பணம் சம்பாதிப்பதிலும் அதை சேமிப்பதிலும் தொலை தூர சிந்தனையுடன் நடந்து கொள்வீர்கள்.. தானும் மகிழ்ச்சியாக இருந்து தன்னை சார்ந்தோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பக்கூடியவர்..

அழகான வசியமான பேச்சுதான் உங்கள் பலம்..காலப்புருச லக்னத்துக்கு இரண்டாம் வீடு உங்கள் ராசி என்பதால் நீங்கள் கொஞ்சம் பேசினாலும் எல்லோருக்கும் பிடிக்கும்.

உங்கள் ராசிக்கு குரு ஏழாவது ராசிக்கு வருகிறார்.. இது உங்கள் ராசிக்கு குரு பலம்...குருபலம் வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்..வீட்டில் சுபகாரியம் கைகூடும்..ஆடை ,ஆபரணம்,சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்..வருமானம் பெருகும்..சேமிப்பு உயரும் குரு பலம் என்பது தெய்வீக பலம்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.. 

கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் .ராசிக்கு அஷ்டம சனி ஒரு பக்கம் தொல்லை கொடுத்து கொண்டிருந்தாலும் குரு பார்வை சில தோசங்களை நீக்கி சனியை கட்டுப்படுத்துகிறார்....

உங்கள் ராசிக்கு குரு பார்வை அதிக பலம்..ராசிக்கு ஏழில் குரு வந்தாலும் குரு நின்ற இடம் பலன் தருவதை விட பார்த்த இடம் அதிக பலன் தரும்...

மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளை குரு பார்வை செய்வதால் அந்த ராசிகளில் உங்கள் ஜாதகத்தில் இயற்கை சுபர்கள் இருப்பின் அதிக நன்மைகளை செய்வார்கள் ..காரணம் குரு பார்வை அந்த கிரகங்களை அதிக வலிமைபடுத்தும்..

உங்கள் ராசிக்கு குரு லாபஸ்தானத்தை பார்வை செய்வதால் சேமிப்பு அதிகம் உண்டாகும்...வருமானம் பெருகும்...உங்கள் ராசியையே குரு பார்வை செய்வதால் தன்னம்பிக்கை பெருகும்..புதிய முயற்சிகள் கைகூடும்..உடல் ஆரோக்கியம் மேம்படும்...ராசிக்கு மூன்றாம் இடத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் சகோதர வழி ஆதாயம் உண்டாகும் தைரியம் பெருகும் ..தொலை தொடர்புகளால் அதிக ஆதாயம் உண்டாகும்..

திருப்பதி பெருமாளை வழிபடவும்..குலதெய்வம் கோயில் சென்று வழிபட்டு வரவும் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இஷ்ட தெய்வ கோயில் சென்று வழிபட நன்மைகள் பெருகும் ..


            

மிதுனம் ஒரு இரட்டை ராசி..எதிலும் இரட்டை பலன்களை அடைய கூடியவர் நீங்கள்தான்...அறிவுகிரகமான புதனை ராசி அதிபதியாக கொண்டவர் நீங்கள் என்பதால் உங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்றவர்கள் ஏராளம்..அந்த அறிவு அளவுக்கதிகமாக போனால் யாரையும் எதையும், நம்பாமல் மனதை போட்டுக்குழப்பி கொள்வீர்கள் .....

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த குருபகவான் இப்போது ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். இது ருண, ரோக ஸ்தானம் ஆகும்..ருணம், ரோகம் என்றால் கடன்,நோய்...ஏற்கனவே அப்படித்தானே இருக்குமா இன்னுமா எனக்கேட்பவர்களுக்கு இது உங்கள் கணவன் அல்லது மனைவிக்காக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுக்காகவும் இருக்கலாம் ..

ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி மருத்துவரை சந்திக்க நேரும்...விரய செலவுகள் அதிகமாக இருக்கும்..ராசிக்கு கண்டக சனியும் நடந்து கொண்டிருப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை..தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்...கடன் வாங்குதல் கொடுத்தல் புதிய சிக்கலை உண்டாக்கும்.கூட்டாளிகள் விசயத்தில் கண்காணிப்பு அவசியம்.உடற்பயிற்சி,மனபயிற்சி இக்காலகட்டத்தில் அவசியம்.உணவு விசயத்தில் அதிக கவனம் தேவை.

ராசிக்கு குரு பாதகமான இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே இருக்கிறது..ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் செலவுக்கு ஏற்ற வகையில் வரவும் நன்றாகவே இருக்கும் ராசிக்கு 12ஆம் இடத்தை குரு ஏழாம் பார்வை செய்வதால் விரயம் கட்டுப்பாட்டில் இருக்கும்...தொழில் ஸ்தானத்தை குரு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். 

ஆறில் குரு வரும்போது பலர் வட்டி கட்டும் சூழல் உண்டாகி இருக்கிறது சிலருக்கு அபராதம் கட்டும் நிலையும்,உறவினர்கள் பகையும்,உறவினர்களோடு பஞ்சாயத்து செய்யும் நிலையும் உண்டாகி இருக்கிறது..இது ராசிக்கு மனைவி ஸ்தானத்துக்கு குரு மறைவதால் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவினமும் கருத்து வேறுபாடும் உண்டாக்கும்.மிதுனத்துக்கு குடும்ப வாழ்வு எப்போதும் சச்சரவுதான் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை..

புத்திரகாரகன் குரு மறையும் போது குழந்தைகளால் கவலையும் உண்டானாலும் தன் உச்ச வீட்டை குரு பார்ப்பதால் பெரிய பாதிப்பில்லை..குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகளில் இருப்போருக்கு திருமணம் முடிந்து நல்ல குடும்பம் அமையும்.

புரட்டாசி மாதத்தில் மதுரை மீனாட்சியை வழிபடுவதும்,வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனமும் திருப்பதி பெருமாள் வழிபாடும் செல்வம் குறையாதிருக்கும் வழிகளாகும்.

                                          

உலகில் தாய் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை..அத்தயக தாய் அன்புக்கு அதிபதி சந்திரன்..இவர்தான் உலகில் இருக்கும் தாய்க்கெல்லாம் அதிபதி.அன்பு என்றால் கடக ராசி...தாய் மீதும் குழந்தைகள் மீதும் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் நீங்கள்..அவர்களுக்காக எந்த தியாகமும் செய்வீர்கள்...மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் இருப்பதால் உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டவர்கள் பலர் உண்டு.

மற்றவர்கள் உங்களிடம் சுயநலத்துடன் பழகினாலும் அதையும் தெரிந்து கொண்டே அன்போடு அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்..ஏமாத்திட்டான் என கவலைப்படாமல் அவன் நேரம் அப்படி என கரிசனம் காட்டும் குணம் உங்களுக்கு மட்டுமே உண்டு.

உங்கள் ராசிக்கு போன வருடம் நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது ராசிக்கு ஐந்தில் வருகிறார் அதுவும் உங்க பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு பலமாக வந்து அமர்கிறார் உங்களுக்கு தொல்லை தந்து வந்த ராகுவின் பாதிப்புகள் குறையும்...ராசியில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு பெரும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் தந்து வந்த ராகுவுக்கு குரு பார்வை விழுவதால் ராகு சுபராகி நன்மை செய்வார்..

ராசிக்கு ஐந்தில் குரு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.வருமானம் பெருகும்..சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும் ஆடை,ஆபரணம்,பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்..வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்....

சனிப்பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக அமைகிறது...குரு தன் ஐந்தாம் பார்வையால் உங்கள் பாக்ய ஸ்தானத்தையும்,லாபஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வை செய்வது மிக சிறப்பானது இதனால் சமூகத்தில் உறவினர் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்...லாபம் சேமிப்பு பெருகும் காலி மனை சிலர் வாங்கும் யோகமும் சிலர் வீடு கட்டும் யோகமும் பெறுவர்.

கடக ராசியினர் பெரும்பாலும் தெய்வ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து வழிபடவே விரும்புவர் சீரடி,ராகவேந்திரா,திருப்பதி,சபரிமலை பலருக்கு விருப்பமான இடமாக இருக்கும்..உங்கள் இஷ்ட தெய்வத்தை உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வாருங்கள் குலதெய்வத்தை வருடம் ஒருமுறை வழிபடுங்கள்                                       


உலகிற்கெல்லாம் ஒளி வழங்கும் சூரியனின் சொந்த ராசியில் பிறந்த சிம்ம ராசி நண்பர்களே...உங்கள் பலமே உங்கள் உழைப்புதான்.நேர்மை,நியாயம்,தர்மபடி வாழவே விரும்புவீர்கள் எதையும் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் நீங்கள் ...தொழிலை தெய்வமாக மதிப்பீர்கள்..மனதில் அன்பு நிறைய இருந்தாலும் அதை சரியானபடி வெளிக்காட்ட மாட்டீர்கள்..இதனால் முன்கோபகாரர் போலவும்..கறாரானவர் போலவும் பிறருக்கு தோற்றமளிப்பீர்கள் ...

உங்கள் ராசிக்கு ஏழரை சனி,அஷ்டம சனி எதுவும் இல்லை ..கண்டக சனி,அர்த்தாஷ்டம சனி எதுவும் இல்லை...உங்கள் ஜாதகத்தின் படி ஏதாவாது திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் இப்போது துன்பத்தில் இருப்பீர்கள் ..குருபோன வருடம்முழுவதும் ராசிக்கு மூன்ராம் இடத்டில் இருந்து அதிக அலைச்சல்,விரயம் ,இட மாறுதல் என கொடுத்து வந்தார் இப்போது குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு மாற இருக்கிறார்..

நான்காம் இடம் சுக ஸ்தானம்...இது சிலருக்கு இடமாற்றம் கொடுத்தாலும் அது அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய இட மாறுதலாகவே இருக்கும்...சிலருக்கு புதிய வாகனம்,சொத்துக்கள் அமையும்...சிலர் காலிமனை வாங்குவர் சிலர் புது வீடு கட்டுவர் சிலர் புதிய வாகனம் வாங்குவர்...நான்கில் குரு சொத்து ,சுகத்துக்காக சுப விரயம் செய்தலை குறிக்கும்..புதிதாக கடன் உண்டானாலும் அது குடும்பத்தின் சுப செலவாகவே இருக்கும் நான்காம் இட குரு பெரிய நன்மையும் இல்லை பெரிய தீமையும் இல்லை சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்த்தால்  அதிக நன்மைகளை கொடுக்கும்படியாகவே இருக்கிறது ...வீடு வாஸ்து படி சரி செய்ய விரும்புவோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் 

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்களால் சேமிப்பு உயரும்..தொழில் ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தொழிலில் எந்த ஆபத்தும் இருக்காது பதவி உயர்வு அகூடுதல் வருமானம் கிடைக்கும்..விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீண் விரயங்கள் இனி குறையும் 

முருகனை செவ்வாய் தோறும் வழிபடலாம் சூரியனின் ராசிக்காரர் என்பதால் சூரியன் உதிப்பதற்கு முன் எழுவதே நல்ல வழிபாடுதான்..சூரியனை நீங்கள் உதிக்கும்போது பார்த்தால் அதிர்ஷ்டம்...
திருச்செந்தூர் ,பழனி,திருவண்ணாமலை உங்களுக்கு நல்ல வழி காட்டும் திருத்தலங்களாகும்..


                                    

கன்னி மகனை கைவிடேல் என ஒரு பழமொழி இருக்கு..இதுக்கு என்ன அர்த்தம்..கன்னி ராசிக்காரங்க நட்பு மற்ற எல்லா ராசிக்காரங்க நட்பை விட உயர்வானது எனமுன்னோர்கள் சொல்லி வெச்சிருக்காங்க...அத்தயக நல்ல மனசுக்கு சொந்த காரங்க கன்னி ராசியினர்..புதனை ராசி அதிபதியாக கொண்டிருப்பதால் நல்ல அறிவாற்றல் நிரம்பியவர்கள் ..புதனை உச்ச வீடாக கொண்டவர்கள் சுக்கிரன் இந்த ராசியில் நீசம் அடைவதால் சுயநலம் இல்லாதவர்கள் ...

கன்னி ராசிக்கு இப்போது அர்த்தாஷ்டம சனி நடப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை...குடும்பத்தினர் மற்றும் உறவு வகையில் வீண் பிரச்சினைகள் எதிர்ப்பு பகை உண்டாகும் காலம் என்பதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை...மருத்துவ செலவுகள்.வீண் விரயங்கள் ஏதேனும் ஒரு வகையில் குடும்பத்தாரால் உண்டாகும்...சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டு வாருங்கள்..தொழில் செய்யுமிடத்தில் உடன் இருப்போரால் தொல்லைகள் அதிக வேலை பளு இருப்பினும் சமாளிப்பீர்கள்..காலில் அடிபடுதல்,இடுப்பில் பிரச்சினை போன்ற தொல்லைகளும் இருதய கோளாறுகளும் நான்கில் சனி வரும் போது பலருக்கு நடந்திருக்கிறது ..முன்கூட்டி விழிப்புணர்வுடன் இருந்து கொண்டால் வரும் முன் காக்கலாம் 

குரு உங்கள் ராசிக்கு இதுவரை தன வாக்கு ஸ்தானமாகிய இரண்டில் சஞ்சரித்து வந்தார்..இப்போது குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு மாறுகிறார் ..மூன்றாம் இடம்..தைரியத்தை இழக்க செய்யும் என பழைய நூல்களில் சொல்லப்பட்டாலும்..குரு பார்வை நம்மை காத்து நிற்கும்..குரு தன் ஏழாம் பார்வையாக பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் உங்கள் குரு அருளினாலும்,குலதெய்வ அருளினாலும் முன்னோர்களின் ஆசியாலும் பெரிய தீங்கு உண்டாகாது...ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்கள்,கூட்டாளிகள்,மனைவி வழியில் ஆதாயம் ,உதவிகள் கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டு...

கன்னி ராசியினர் சபரிமலை ஐயப்பன் வழிபாடு ,ஸ்ரீரங்கம் பெருமாள்,வழிபாடு செய்வதால் பண சிக்கல் ,தொழில் சிக்கல் தீர வழி  பிறக்கும்..