தேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 2005-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 998 மதிப்பெண்கள் எடுத்தார். பின்னர், வீரச்சிபாளையத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்தார். முதலாம் ஆண்டு படிப்பை முடித்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின்போது ராஜேஸ்வரியின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் பாடவாரியாக உள்ள மதிப்பெண்களுக்கும், மொத்த மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் உள்ளது தெரிந்தது.


இதுகுறித்து பொதுத்தேர்வு துறை இணை இயக்குனர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு ராஜேஸ்வரியை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மதிப்பெண்களில் திருத்தம் செய்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அரசு வழங்கிய சான்றிதழை தான் பள்ளியில் சமர்ப்பித்தேன். இதில் என் மீது எந்த தவறும் இல்லாததால், என்னை மீண்டும் பள்ளியில் சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாணவியை பள்ளியில் இருந்து நீக்கிய உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டது. அதோடு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து புதிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, பள்ளியில் மீண்டும் சேர்ந்த ராஜேஸ்வரி 2-ம் ஆண்டு படிப்பை முடித்தார். ஆனால் அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அவரது சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குனருக்கு 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். பின்னர், ‘நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறேன். ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, சான்றிதழ்களை அவருக்கு வழங்கவேண்டும். அதேநேரம், ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் தேர்வுத்துறை இயக்குனர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால், அவருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை அந்த மாணவிக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.