2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கப்படுகிறதா? அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகம் குறித்தும், புத்தக சுமை குறித்தும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நிர்ணயித்துள்ள பாடபுத்தகத்தை மட்டுமே வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ‘தமிழக பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூடுதல் புத்தகச்சுமை இருக்கக்கூடாது என்பது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

சுற்றறிக்கையைப் படித்துப்பார்த்த நீதிபதி, ‘தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தப்படுகிறதா?, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்த பாடப்புத்தகங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பது குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். பின்னர், இந்த ஆய்வு குறித்த அறிக்கையை வருகிற அக்டோபர் 9-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.