எல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்

ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிர்வாகங்களின் கீழ், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளிகள் மட்டும், 37 ஆயிரம். அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள்; 7,200 நடுநிலை; 3,000 உயர்நிலை; 2,800 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, தனித்தனி வளாகங்களில் இயங்குவதால், மாணவர்கள், அவ்வப்போது பள்ளி மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, பல மாணவர்கள், மாற்று சான்றிதழ் பெற்று, பின், எந்த பள்ளியிலும் சேராமல், படிப்பை பாதியில் விடுகின்றனர். அதை தவிர்க்க, ஒரே வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒன்று என, 32 பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஒரே பள்ளியில் படிக்க வசதி செய்யப்படுகிறது. இதை படிப்படியாக, வட்டார அளவில் விரிவுபடுத்தவும், பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் விவாதித்துள்ளார். அப்போது, 'இந்த திட்டத்தை, உடனே செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுகுறித்து, அரசியல் ரீதியான பிரச்னைகள் வந்தால், அவற்றையும் எதிர்கொண்டு, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்' என, அவர் குறிப்பிட்டு உள்ளார். இத்திட்டம் அமலுக்கு வந்தால், ஒன்றுடன் ஒன்று என, பல பள்ளிகள் இணைக்கப்படும். அதனால், குறைந்தபட்சம், 1,000 பள்ளிகளுக்கு மேல் மூடப்படும் என, தெரிகிறது.

பள்ளிகள் இணைப்பு ஏன்?
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்; ஆனால், தலா, இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, ஊதியமாக செலவிடப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளால், கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக, 3,003 பள்ளிகளுக்கு, மத்திய அரசின் நிதியுதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளிகளை, ஒன்றுடன் ஒன்று இணைக்க, பள்ளி கல்வி முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரே வளாகத்தில், பிளஸ் 2 வரையிலான கல்வி என்ற திட்டத்தை, அமல்படுத்த வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -