தேசிய நுழைவுத்தேர்வு ரிசல்ட் தாமதம் : வேளாண் பல்கலையில் 156 இடம் காலி

கோவை: தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 156 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.ஐ.சி.ஏ.ஆர்., என்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும்
வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.ஜூன், 22 - 23ல் நடந்த தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன.மறுதேர்வுகள், ஆக.,18 - 19ல் நடந்தது. ஆக.,30ல், தேர்வு முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், பல்வேறு மாநில வேளாண் கல்லுாரிகளில், தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படவில்லை.வேளாண் பல்கலை டீன், மகிமைராஜா கூறியதாவது: வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும் 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம் கல்வியாண்டில், 3,422 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 14 உறுப்பு கல்லுாரிகளில், தேசிய ஒதுக்கீட்டுக்காக, 156 இடங்கள் உள்ளன.இளங்கலையில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பட்டுப்புழுவளர்ப்பு, உணவு ஊட்டச்சத்து,வேளாண் வணிக மேலாண்மை, வேளாண் பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில், 156 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பொருத்து, தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர்கூறினார்.