மாணவர் அடையாள அட்டையில் 'Q.R. CODE' இணைப்பு

 மாணவர், அடையாள ,அட்டையில், 'க்யூ.ஆர்., ,கோடு' இணைப்பு

திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான அடையாள அட்டையில், 'க்யூ.ஆர்., கோடு' இணைத்து வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர், பி.என். ரோடு, பாண்டியன் நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. 639 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கல்வித் தரத்தை மேம்படுத்த, பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளியில் நேற்று, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜோசப் தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.வழக்கமாக, அடையாள அட்டையில் பெயர், முகவரி, போட்டோ, பிறந்த தேதி, ரத்தப் பிரிவு விபரங்கள் இருக்கும்.இந்த அடையாள அட்டையில், 'க்யூ.ஆர்., கோடு' அச்சிடப்பட்டுள்ளது.இதை, மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், மாணவரின் முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம். 

விடுமுறை, ஒவ்வொரு மாணவருக்கும், தினமும் வழங்கப்படும் வீட்டுப் பாடம், மாணவரின் தனித்திறன், பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகளின் போட்டோ, வீடியோ மற்றும் டைரி குறிப்பு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.தலைமை ஆசிரியர் ஜோசப் கூறியதாவது:

கரூர் மாவட்டம், வெள்ளியணை துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்தி, அப்பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது தெரிந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள், வெள்ளியணை சென்று விபரங்களை பெற்று, இந்த முயற்சியில் இறங்கினர்.

ஒவ்வொரு தகவலுக்கும், தனித்தனி, 'லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து, மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.