N.C.E.R.T பரிந்துரை செய்யாத பாடப்புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படும்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறி, வீட்டுப்பாடங்களை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்’ என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புருஷோத்தமன் ஆஜராகி, ‘என்.சி.இ.ஆர்.டி. விதிகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை, மொழிப்பாடம் உள்பட 3 பாடங்கள் மட்டுமே நடத்தவேண்டும். ஆனால், 8 பாடங்களை நடத்துகின்றனர். இதற்காக தனியார் பதிப்பகங்களிடம் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் புத்தகங்களை வாங்குகின்றனர். சிறுகுழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான கல்வியை திணிக்கின்றனர். இதனால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். கல்வி கற்பதில் விருப்பம் இல்லாமல் போய்விடுகின்றனர்’ என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனிடம், நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். 1 முதல் 2-ம் வகுப்பு வரை இந்தி அல்லது தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று 3 பாடங்களும், 3 முதல் 5 வரை கூடுதலாக சுற்றுச்சூழல் அறிவியல் (இ.வி.எஸ்.) என்ற பாடத்தை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, எதற்காக 8 பாடங்கள் நடத்தப்படுகின்றன?. தனியார் பதிப்பகங்களுடன் கைகோர்த்து பள்ளிக்கூடங்கள் செயல்படுகிறதா?. எதற்காக குழந்தைகளுக்கு இத்தனை பாடங்களை திணிக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர் குறுக்கிட்டு, ‘1-ம் வகுப்பு மாணவருக்கு, உலகிலேயே மிகச்சிறிய விமானம் எது? என்றும், இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது? என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி குழந்தைகள் பதில் சொல்லும்?’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள பாடங்களை தவிர, தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக்கூடாது. இந்த புத்தகங்கள் எல்லாம் சந்தையில் கிடைப்பதால் தானே வாங்குகின்றனர்.

எனவே, இந்த புத்தகங்களை எல்லாம் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்போகிறேன். இதற்காக இந்த வழக்கை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கருத்து கூறினார்.