வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

போக்குவரத்து போலீசார், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், புதிய வாகனங்களின் காப்பீடு, வாகன காப்பீடு புதுப்பித்தல் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கேட்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ (டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் உள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000-ம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஏற்கவேண்டும்

வாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து போலீசாரோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ, வாகன ஓட்டுனர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.