நாட்டின் சிறந்த புத்தகம் விருது கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’ வழங்கப்படுகிறது

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார்.


சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று இருக்கிறது. இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் (எப்.ஐ.சி.சி.ஐ) இந்த விருதை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

இந்தி தவிர ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அவை வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தின்’ மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:- பெருமைமிக்க விருது இது. சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் தான் இந்த விருது குறித்து எனக்கு முதலில் அறிவித்தார். என் புத்தகத்தை விருதுக்கு தேர்ந்தெடுத்த இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு நேரடியான விருது அல்ல. சாகித்ய அகாடமிக்கான விருது. சாகித்ய அகாடமி தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் விருது தரும். ஆனால், தமிழில் வெளிவந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தால்’ சாகித்ய அகாடமி விருது பெறுவது கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்தியாவின் பழமையான சிறந்த மொழி தமிழ் என்று அண்மையில் பிரதமர் நரேந்திரமோடி வானொலியில் ஆற்றிய உரை நமக்கெல்லாம் பெருமிதம் தந்தது. அதே நேரத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பழம் நழுவி விழுந்த பாலில் கற்கண்டும் விழுந்து கரைந்ததுபோல் இருக்கிறது இந்த செய்தி. தமிழ்மொழி தன் தகுதியால் மொழிகளின் வெளிகளை தாண்டி விரிந்து கொண்டே செல்கிறது. இந்த விருது ஒவ்வொரு தமிழரையும் தங்கள் உயரத்தில் ஓர் அங்குலம் உயர்த்தி இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks