பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவ - மாணவியர், பெற்றோருடன் போராட்டம்

அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, மணப்பாறை அருகே, 
மாணவ - மாணவியர், அரசு பேருந்தை சிறை பிடித்து, 
பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம், 
மணப்பாறை அருகே, திருநெல்லிப்பட்டி ஊராட்சியில், கார்வாடி 
கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் 
பள்ளியில், 143 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். 


எட்டு ஆசிரியர்கள் உள்ளனர்.இங்கு, எட்டாம் வகுப்பு 
முடித்தவர்கள், உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால்,
 6 கி.மீ.,யில் உள்ள சுக்காம்பட்டிக்கு செல்ல வேண்டும். 
இல்லையெனில், 10 கி.மீ.,யில் உள்ள பன்னாங்கொம்புக்கு 
செல்ல வேண்டும். போதிய பேருந்து வசதி இல்லாததால் 
மாணவர்கள், நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கு சென்று, 
கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இந்தப் பள்ளியை, உயர் நிலைப் பள்ளியாக 
தரம் உயர்த்த வேண்டும் என, கிராம மக்கள் கோரி வந்தனர். 
இதற்காக, 2014ம் ஆண்டு, கல்வித் துறைக்கு, கிராம மக்கள் 
சார்பில், பங்களிப்பு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் 
செலுத்தப்பட்டது.அதன்பின், ஒவ்வொரு கல்வியாண்டிலும், 
தங்களது பள்ளி தரம் உயர்த்தப்படும் என, கிராம மக்கள் 
எதிர்பார்த்து காத்திருந்தும், ஏமாற்றமே மிஞ்சியது. நடப்பு 
கல்வியாண்டும், கார்வாடி பள்ளி தரம் உயர்த்தப்படாமல், 
அருகில் உள்ள முத்தாழ்வார்பட்டி பள்ளிதரம் உயர்த்தி 
அறிவிக்கப்பட்டது. 

இதனால், கார்வாடி கிராம மக்கள், கடும் அதிருப்தி 
அடைந்தனர்.இதைக் கண்டித்து, பள்ளி மாணவ - மாணவியர், 
நேற்று முன்தினம் காலை, வகுப்புகளை புறக்கணித்தனர். 
மாணவர்களுடன், பெற்றோரும் சேர்ந்து, கார்வாடி வழியாக 
கல்லாமேடு சென்ற அரசு பேருந்தை, சிறை பிடித்து 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீரங்கம், ஆர்.டி.ஓ., பொன் ராமர், 
மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், மணப்பாறை, டி.எஸ்.பி., 
ஆசைத்தம்பி மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பேச்சு 
நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கிராம 
மக்களே, உணவு தயார் செய்து அளித்தனர்.மாவட்ட முதன்மைக் 
கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், போராட்டம் நடத்திய
 மாணவர்கள், பெற்றோரிடம் பேச்சு நடத்தினார். 'வரும் 
கல்வியாண்டில், பள்ளியை தரம் உயர்த்துவதற்கான 
முயற்சி மேற்கொள்ளப்படும்' என, அவர் உறுதி அளித்ததால், 
அனைவரும் கலைந்து சென்றனர்.