மக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன!

'கேரளாவில் நிலப்பகுதி குறைவு, மக்கள் பெரும்பாலும் நதிக்கரைகளை ஒட்டியே வாழ்கிறார்கள். கேரளாவின் 44 நதிகளை ஒட்டியும் மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காவிரிக் கரையோரப் பகுதிகளைப் போலவே அங்கும் வீட்டின்
புழக்கடையில் நதிகள் பாய்வதை சர்வசாதாரணமாகக் காணலாம். நதிகளைப் பாதுகாக்கிறோம்... நதிக்கரை ஆக்ரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் அந்த மக்களின் வாழ்விடங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல. இது தவிரவும் நதி நீரை மாடு படுத்தும் தொழிற்சாலைகள், அரசியல்வாதிகள் மற்றும் பெரும்பண முதலைகளால் அதிகாரத்தின் பெயரால் ஆக்ரமிக்கப்பட்ட நதிக்கரையோர பகுதிகளை மீட்டெடுப்பது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கு போதுமான அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் இது அத்தனை எளிதில் சாத்தியப்படுவதில்லை. கேரள நதிகளைப் புனரமைத்து அவற்றை பாதுகாப்பதற்கான ஒரு வரைவைக் கொண்டு வரும் பொருட்டு கேரள அரசு இந்தியாவின் 'தண்ணீர் மனிதர்' எனப் பாராட்டப் படும் ராஜேந்தர் சிங்கை அழைத்திருந்தது. அவரும் கேரள அரசின் அழைப்பை ஏற்று 2015 ஆம் ஆண்டு அம்மாநிலத்திற்கு வருகை தந்து கேரள அரசுக்கு நதிகளைப் பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்துக் கொடுத்த நதிப் பாதுகாப்பு வரைவு தெள்ளத் தெளிவாக இருந்த போதும் கேரள அரசால் அதனை அத்தனை எளிதில் செயல்படுத்த முடியவில்லை.'
கேரள வெள்ளச் சேதம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கேரள அமைச்சர் ஒருவர் சொன்ன பதில் இது.
தமிழில் ஒரு பழமொழி உண்டு...
'அவசரத்தில் கல்யாணம் செய்தால் அவகாசத்தில் அழுது தீர்க்க வேண்டும்'
என... அப்படித்தான் இருக்கிறது கேரள அமைச்சரின் பதில்.
அதன் விளைவு தான் இன்று கேரளாவின் 44 நதிகளிலும் பொங்கிப் பிரவகித்து ஓடிக்கடந்து அரபிக் கடலைச் சங்கமிக்கும் அசுர வெள்ளமும் அதனாலான சொல்லிலடங்கா சேதங்களும். இப்போது பெரு வெள்ளத்தையும் அதனால் உண்டான கணக்கற்ற சேதங்களையும் கண்ட பிறகாவது நதிகளை ஆக்ரமித்து வாழிடங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் மனமாற்றம் அடைவார்களா எனத் தெரியவில்லை. வெள்ளம் வடிந்ததும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத்தான் வேண்டும். ஆனால், அதற்கு முன்பு தங்களது இயல்பு வாழ்க்கை எதனால் பாதிக்கப்பட்டது? என்பது குறித்த ஞானத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
இயற்கையாகப் பார்த்து அப்படியொரு வாய்ப்பை அரிதாகத்தான் மக்களுக்கு வழங்குகிறது. அப்போதும் மக்கள் திருந்தவில்லை, அரசுகள் திருந்தவில்லை எனில் இயற்கைச் சீற்றங்களின் பலனை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. வரலாற்றில் பன்னெடுங்காலங்களாக எப்போதும் மக்களே பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன! இப்போது கேரள நதிகள் ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்து சுருட்டிச் செல்வது அனைத்தும் மக்களால் உண்டாக்கப்பட்டவையே! அந்த இழப்பிலிருந்து கேரளம் மீள சில காலம் ஆகலாம்.