2 நாட்களுக்கு மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன. மேலும் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. எனவே நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இடைவெளிவிட்டு மீதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை (16/08/2018) விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.