B.V.Sc., இந்த மாத இறுதியில் கலந்தாய்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் (கலையியல் பிரிவு) 288 இடங்களும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பில் (தொழிற்கல்வி) 18 இடங்களும், பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் 94 இடங்களும் என மொத்தம் 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக 14 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 391 பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகும். இவற்றில் 11 ஆயிரத்து 745 தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களின் தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலசந்திரன் நேற்று வெளியிட்டார். அப்போது டீன் (பொறுப்பு) குமணன், பதிவாளர் திருநாவுக்கரசு, தேர்வுக்குழு செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர், விவரம் வருமாறு:-

பழனிசாமி ஸ்ரீகார்த்திகா (ஈரோடு), வி.ரஜினிரகு (சேலம்), பி.கே.இந்துமதி (நாமக்கல்).

பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

எம்.பூஜிதா (பெரம்பலூர்), ஆர்.மணிவாசகம் (ராமநாதபுரம்), எஸ்.இலக்கியா (வேலூர்).

முன்னதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடை மருத்துவ படிப்புக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களில் 43.12 சதவீதம் பேர் முதல் பட்டதாரிகள் ஆவர். தகுதிபெற்றவர்களில் 54.15 சதவீதம் பேர் மாணவிகள் ஆகும். 74.07 சதவீதம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை பட்டியலை www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம். இந்த மாதத்தில் 4-வது வாரத்தில்(மாத இறுதியில்) கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

தகுதிபெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்படி அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு நாட்களில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks