'கோமா' நிலைக்கு சென்ற மாணவர்; ஆசிரியர்கள் பேச்சால் பிழைத்தார்

கோமா' நிலைக்கு சென்ற மாணவன், ஆசிரியர்களின் பேச்சால், உயிர் பிழைத்தார்.
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், அருண்பாண்டியன், 17, என்ற மாணவன், பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், மின்னாத்துார் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்வார்.



அவசர சிகிச்சை பிரிவுநேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து, மைதானத்தில், நண்பர்களுடன் விளையாடிய பின், பஸ் ஸ்டாண்ட் சென்ற அருண்பாண்டியன், சில நிமிடங்களில்மூச்சடைத்து, மயங்கி விழுந்துள்ளார். அவரை, கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர், நாடித் துடிப்பு மிகக் குறைவாக உள்ளதால், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதன்படி அங்கு சேர்த்தனர்.அங்கிருந்த டாக்டர்கள் சோதனை செய்து, நாடித் துடிப்பு மிகவும் குறைந்து விட்டதாக தெரிவித்தனர். சில நிமிடங்களில் அவர், 'கோமா' நிலைக்கு சென்றார்.

மாணவனின் பெற்றோர் மற்றும் பள்ளிஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் ஆகியோர், நேற்று, அருண்பாண்டியனை, அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்தனர்.கண்கள் மேல் நோக்கியபடி, எந்த அசைவும் இல்லாத நிலையில் மாணவர் படுத்திருந்தார்.அங்கிருந்த டாக்டர்கள், 'ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்று விடும் நிலையில் உள்ளது' எனக் கூறியுள்ளனர்.கண் கலங்கிய ஆசிரியர்கள் மணிகண்டனும், சோமசுந்தரமும், மாணவன் காதருகே சென்று, 'தம்பி கண் முழிச்சுப் பார்; யார் வந்திருக்கிறோம் என்று' என, தொடர்ந்து பேச்சு கொடுத்தனர்.

அசைவற்றுக் கிடந்த மாணவரின் கண்கள், ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு, லேசாக உருளத் துவங்கின.இதைப் பார்த்த பின் மறுபடியும், இரண்டுஆசிரியர்களும் அடுத்தடுத்து பேச, மாணவர் கண் விழித்து கை, கால்களை அசைத்தார்.'உனக்கு ஒன்றும் இல்லை; நாங்கள் இருக்கிறோம்' என நம்பிக்கையூட்டி ஆசிரியர்கள் பேசப் பேச, 10 நிமிடங்களில் மாணவர் சுயநினைவு திரும்பி, தெளிவாக பேச துவங்கினார்.

இதைப் பார்த்து, டாக்டர்கள் மற்றும் மாணவனின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சினிமாவில் வருவது போன்ற இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது