ஊதிய முரண்பாடு, ஒரு நபர் கமிட்டி அறிக்கை இன்று வருமா?

ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, 'கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 


'அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்' என, அறிவித்தார். அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, இன்று கமிட்டி சார்பில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.