ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ‘வெயிட்டேஜ்’ முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது.


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.