பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவருக்கு, 'டிசி'

புதுக்கோட்டை அருகே, பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவருக்கு, அரசு பள்ளியில் 'டிசி' கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை, அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 1 கம்ப்யூட்டர் கணிதம் படித்து வருபவர் நித்தீஸ்வரன், 16. இவர் தனது ஊர், ஏகபெரும்பளுரில் இருந்து, தினமும் பள்ளிக்கு, அரசு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். அப்போது, நித்தீஸ்வரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 


இதனால் கோபம் அடைந்த பள்ளி தலைமையாசிரியர், ரத்தினகுமார், 49, நேற்று முன்தினம், நித்தீஸ்வரனை அழைத்து, பள்ளியிலிருந்து நீக்கி, 'டிசி' வழங்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த நித்தீஸ்வரனும், அவரது தாயார் வள்ளி, 45, என்பவரும், நேற்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா, 'பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்த்துக் கொள்ளப்படுவார். இது குறித்து, தலைமையசிரியரிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.