என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

என்ஜினீயரிங் படிப்புக்கு இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற மாணவர் சேர்க்கை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் எத்தனை சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது? கல்லூரி முன்வைப்பு தொகையை எப்போது செலுத்த வேண்டும்? விருப்ப வரிசை பட்டியலை எப்போது தேர்வு செய்ய வேண்டும்? கல்லூரி ஒதுக்கீடு எப்போது வழங்கப்படும்? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மொத்தம் 5 சுற்றுகளாக ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வில் 190 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடம்பெற உள்ளனர். இந்த கலந்தாய்வு 21-ந்தேதி(நேற்று) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. இவர்களில் கல்லூரி ஒதுக்கீடு பெற்றவர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும்.

2-ம் சுற்று கலந்தாய்வில் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடம்பெற உள்ளனர். இவர்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இவர்களில் இடம் கிடைத்தவர்கள் அந்தந்த கல்லூரிகளில் 8-ந்தேதிக்குள் சேரவேண்டும்.

150 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 3-ம் சுற்று கலந்தாய்வில் பங்கு பெற இருக்கின்றனர். வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடைபெறும். இதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் அடுத்த மாதம் 13-ந்தேதிக்குள் சேரவேண்டும்.

4-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதில் 125 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் ‘சீட்’ கிடைத்தவர்கள் கல்லூரிகளில் அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் சேர்ந்துவிடவேண்டும்.

5-வது சுற்று கலந்தாய்வில் மீதம் உள்ள தகுதியான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி நிறைவடைகிறது. இதில் இடம் கிடைத்தவர்கள் அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் கல்லூரியில் சேரவேண்டும்.

கல்லூரி முன்வைப்பு தொகையாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு 1,000 ரூபாயும் ஆன்-லைனில் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் செலுத்த முடியாதவர்கள் டி.டி. ஆக எடுக்கலாம். விருப்ப வரிசை பட்டியலை மாணவர்கள் தேர்வு செய்யும் போது எத்தனை கல்லூரி-பாடப்பிரிவுகள் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அதிகளவில் விருப்ப வரிசை பட்டியலை தேர்வு செய்து கொள்வது நல்லது.

விருப்ப பட்டியலை தேர்வு செய்த பின்னர், அதனை உறுதி செய்ய வேண்டும். அதற்கான தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுதி செய்யவில்லை என்றால் இணையதளம் தானாகவே வரிசைபட்டியலை ஏற்றுக்கொள்ளும்.

ஒவ்வொரு சுற்றின் நிலையும் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்டப்பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து கவனிக்க வேண்டும். கலந்தாய்வு சார்ந்த அனைத்து செயல்களையும் https://tnea.ac.in என்ற இணையதளத்தில் மட்டுமே செய்யவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது