பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்காததை எதிர்த்து வழக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ஆடலரசு உள்பட 15 பேர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஓவியம், உடற்பயிற்சி உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர அடிப்படையில் தமிழகம் முழுவதும் நியமிக்க தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 16,549 ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நாங்களும் பல்வேறு பள்ளிகளில் பகுதிநேர ஓவிய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம்.

ஆரம்பத்தில், எங்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ரூ.7,700 ஊதியம் பெற்று வருகிறோம். எங்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டாலும், மே மாதங்கள் மட்டும் ஊதியம் வழங்குவது இல்லை.

ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களும் ஊதியம் வழங்க நிதிஒதுக்கீடு செய்துவிட்டு, மே மாதம் மட்டும் ஊதியம் வழங்காதது ஏன்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து பல கோரிக்கை மனு அனுப்பியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்குமாறு தமிழக கல்வித்துறை முதன்மை செயலாளர், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்ருஹானா புஜாரி, மனுவுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.