வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண்

படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.