இன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு இன்று நிறைவு

சென்னை, இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், முதல் சுற்று மாணவர்களுக்கான விருப்ப பதிவு இன்றுடன் முடிகிறது; நாளை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,
படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. கவுன்சிலிங்கிற்கான கட்டணம் செலுத்த, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.முதல் சுற்றில், 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 7,500 பேர் மட்டும், கட்டணம் செலுத்தி விருப்ப பதிவில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கான விருப்ப பதிவு வசதி, இன்று மாலை, 5:00 மணியுடன் முடிகிறது. இதையடுத்து, மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், மாணவர்கள், முன்னுரிமை கொடுத்து பதிவு செய்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு காலியாக இருந்தால் அவை ஒதுக்கப்படும்.இந்த ஒதுக்கீடு, நாளை ஒவ்வொரு மாணவர்களுக்கும், இ - மெயில் மற்றும், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்படும். மேலும், அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கை தளத்தில், மாணவர்களுக்கான தனி பக்கத்திலும் குறிப்பிடப்படும். அதை, வரும், 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்து, 'லாக்' செய்ய வேண்டும். அவ்வாறு, லாக் செய்து, உறுதி அளிக்காவிட்டால் அவர்களுக்கு, 'சீட்' ஒதுக்கீடு கிடைக்காது.மீண்டும், அடுத்த சுற்றில் பங்கேற்கலாம். அப்போது, தற்போதைய தரவரிசைப்படியான இடம் கிடைக்காது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு வரும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.