பள்ளி வளாகத்தில், மின்சாரம் தாக்கிய மாணவியை காப்பாற்றிய சாமர்த்திய ஆசிரியை!!!

பள்ளி வளாகத்தில், மின்சாரம் தாக்கிய மாணவியை, சாதுர்யமாக காப்பாற்றிய ஆசிரியைக்கு பாராட்டு குவிகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கீதா, 10; அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 11:45 மணியளவில், பள்ளி வளாகத்தில், சங்கீதா நடந்து சென்றார். அப்போது, பள்ளி வழியாக செல்லும் மின் கம்பி, திடீரென அறுந்து

விழுந்தது. அதை எதிர்பாராமல் மிதித்த மாணவி, மின்சாரம் தாக்கி, கீழே விழுந்தார். இதைப் பார்த்த ஆசிரியை வசந்தா, தன் துப்பட்டாவை மாணவி மீது வீசி இழுத்து, அவரை காப்பாற்றினார். காயமடைந்த மாணவி, உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆசிரியை வசந்தா கூறியதாவது: பள்ளி கட்டடத்தின் பின், திடீரென்று அலறல் கேட்டது. நானும், சத்துணவு ஊழியர்களும் ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது, சங்கீதா, மின் கம்பியை பிடித்தபடி கீழே துடித்தபடி கிடந்தார். ஊழியர்கள், மாணவியை துாக்க சென்ற போது, 'அவளை தொடவேண்டாம்' என, தடுத்து நிறுத்தினேன். நான் அணிந்து இருந்த துப்பட்டாவை பயன்படுத்தி, மாணவியை மீட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.