திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் போராட்டம், வீடியோ எடுத்தவருக்கு அடி

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைக் கண்டித்து, ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை, வீடியோ எடுத்தவரை, ஆசிரியர்கள் சரமாரி அடித்து உதைத்தனர்.திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, ஜெயக்குமார் உள்ளார். இவர் மீது, 'ஆசிரியைகளை ஒருமையில் பேசுவது, மாணவர் கல்வி நலனுக்கு வழங்கப்படும் பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது, விடைத்தாள்களை பள்ளியில் இருந்து பெற்று, அதை விற்று, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது' என பல்வேறு புகார்கள் எழுந்தன.


சி.இ.ஓ.,வைக் கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதை, சி.இ.ஓ., அலுவலகம் சார்பில், வீடியோ எடுத்த வாலிபரை, ஆசிரியர்கள் சரமாரியாக அடித்து உதைத்து, கேமராவை உடைத்தனர். போலீசார், அவரைக் காப்பாற்றி, அழைத்து சென்றனர்.