புதிய பாடநூல்களால் புத்தொளி பெறும் அரசுப்பள்ளிகள்

அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நடப்புக் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள்
நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
இது வரை சிபிஎஸ்இ பாடநூல்களிலும் பிற மாநிலப் பாடநூல்களிலும், தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் தனியார் பதிப்பகப் பாடநூல்களிலும் பயன்படுத்தப்படாத புதிய தகவல் தொழில் நுட்ப வளங்கள், இணைய வளங்கள் தமிழத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய பாடநூல்களில் உள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் இணைய வளங்கள் மாணவர்களின் அறிவை வளப்படுத்தும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளன. அகில இந்திய அளவிலான மருத்துவம் போன்ற உயர்கல்விக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தயார்படுத்தவும் ஏற்ற வகையில் புதிய பாடநூல்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப் பட்டுள்ளன.
மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய பாடநூல்களில் உள்ள கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான பயிற்சியை கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அளவில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படுகின்றன. கடந்தவாரம் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சியை அளிப்பதற்கான ஆசிரியர்களுக்குக் கருத்தாளர் பயிற்சி நடத்தப் பட்டது. இப்பயிற்சியில் கல்வித்துறைச் செயலாளர் .உதயச்சந்திரன் அவர்கள் பங்கேற்று புதிய பாடநூல்கள் குறித்து உரையாடினார். மிகுந்த தரத்தோடும் தமிழக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த அக்கறையோடும் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களின் வெற்றி ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்று அப்போது குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து காங்கயம் ஒன்றியத்தில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கn பயிற்சி கடந்த திங்கள் முதல் நான்கு நாட்களாக காங்கயம் ஜேசிஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றன. நாளை முதல் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
முதல் நாள் பயற்சியை பல்லடம் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கு.பெ. கனகமணி அவர்கள் பார்வையிட்டு பயற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இரா.மகேந்திரன், பா.சுசீலா ஆகியோர் காங்கயத்தில் நடைபெறும் பயிற்சியின் வழிகாட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின் மையப் பொறுப்பாளர்களாக இலக்கும நாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தே.மரிய லூயிஸ், காங்கயம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) .சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்று வரும் பயிற்சி மையங்களை முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி அவர்கள் நேரடியாகப் பார்வையிட்டும் வருகிறார்.
புதிய பாடநூல்கள் மூலம் அரசுப்பள்ளிகளில் நடக்கும் மாற்றங்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது