அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இன்று மீண்டும் துவக்கம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, அண்ணா பல்கலை கவுன்சிலிங், ஒரு வார இடைவெளிக்குப் பின், இன்று மீண்டும் துவங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மற்றும், 'ஆன்லைன்' கவுன்சிலிங் ஆகிய, இரண்டு விதமாக நடத்தப்படுகிறது. இதில், சிறப்பு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, ஜூலை முதல் வாரத்தில் நடந்தது.தற்போது, ஒரு வார இடைவெளிக்கு பின், இன்று மீண்டும் கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று நடக்கிறது. இதில், 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாளை, விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில், 235 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதையடுத்து, தொழிற்கல்வி மாணவர்களுக்கு, வரும், 18 முதல், 20ம் தேதி வரை, கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, 1,601 பேர் தகுதி பெற்றுள்ளனர்.