என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இடங்களை தேர்வு செய்வது எப்படி?

என்ஜினீயரிங் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்திவருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன.

என்ஜினீயரிங் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் சான்றிதழ் சரிபார்த்தனர். கட்டணம் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது தான். தரச்சான்று உள்ள கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.55 ஆயிரம். தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.50 ஆயிரம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று உள்ள கல்லூரிகளில் ரூ.87 ஆயிரம், தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் ரூ.85 ஆயிரம்.

கலந்தாய்வு தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆன்லைனில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். முதல் குழுவுக்கு 15 ஆயிரம் பேரும், 2-வது குழுவுக்கு 25 ஆயிரம் பேரும், 3-வது குழுவுக்கு 25 ஆயிரம் பேரும், 4-வது குழுவுக்கு 30 ஆயிரம் பேரும், 5-வது குழுவுக்கு மீதம் உள்ளவர்களும் அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரத்தை முன்வைப்பு தொகையாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் அல்லது டி.டி. எடுத்து உதவி மையங்களில் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் தான் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 3 நாட்கள் நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் எத்தனை இடங்களையும் தேர்வு செய்யலாம்.

ஆனால் 3-வது நாள் மாலை 5 மணிக்குள் ஒரு கல்லூரியையும், ஒரு பிரிவையும் மட்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். மறுநாள் மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் இருந்து அவர்கள் தேர்ந்து எடுத்த கல்லூரி மற்றும் இடம் ஆகிய தகவல் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ.மெயில் ஆகியவை மூலம் கொடுக்கப்படும்.

இந்த சுற்றில் கலந்துகொண்டு இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் முறைப்படி கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கனவே இடத்தை தேர்ந்து எடுத்தவர்கள் ஒரு வாரத்திற்குள் அந்த கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.