'பான் - ஆதார்' இணைப்பு 2019 மார்ச் வரை நீட்டிப்பு

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2019, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு சேவைகளுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக, இந்தாண்டு மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கும்படி, இந்தாண்டு துவக்கத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவில், 'ஆதார் தொடர்பான வழக்குகளில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

ஆதார் தொடர்பான வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், மத்திய அரசு வரித் துறையின் கொள்கை உருவாக்கும் பிரிவான, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை, 2019 மார்ச், 31 வரை நீட்டித்துள்ளது.

ஐந்தாவது முறையாக, இந்த அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 33 கோடி பேருக்கு, பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 16.65 கோடி பான் கார்டுகள், மார்ச் வரை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.