தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் பங்கேற்போரின்
குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயதை நிர்ணயித்து கடந்த 1995-ம் ஆண்டு
ஜனவரியில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி, குறைந்தபட்ச வயது 21 என்றும்,
அதிகபட்ச வயது மற்றவர்களுக்கு 30 வயது என்றும், எஸ்.சி., எஸ்.டி., மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய
வகுப்பினருக்கு 35 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் அறிவிப்பு
இந்த நிலையில், குரூப்-1 தேர்வு தொடர்பாக
வந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் கடந்த 1.6.18
அன்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது
அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்
நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில்
பங்கேற்பதற்கான வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு
தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள உச்சவரம்பைப்போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 1-ஏ, 1-பி பணியிடங்களுக்கு
தற்போதுள்ள எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்,
பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-ல் இருந்து
37-ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30-ல் இருந்து
32-ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
அரசு உத்தரவு
அந்த அறிவிப்பின் அடிப்படையில் அதற்கான
அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இதுதொடர்பான திருத்தங்கள், தமிழ்நாடு அரசுப்
பணியாளர் சட்டத்தில் தனியாக செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.