பி.ஆர்க்., ஆக., 11ல் நுழைவு தேர்வு

பி.ஆர்க்., படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கான, தமிழக அரசின் திறனறி நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர்களை சேர்க்க, தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'நாட்டா' என்ற, தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


தமிழக மாணவர்களுக்கு, நாட்டா நுழைவு தேர்வு குறித்து, அதிக விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானவர்கள், அந்த தேர்வை எழுதாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர முற்படுகின்றனர். இது போன்ற, நாட்டா தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில், திறனறி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் சேரலாம். தமிழக அரசின் இந்த தேர்வு, 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

நடப்பு கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://admissions.annauniv.edu/tanata18 என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. வரும், 6ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 1,000; மற்ற மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் தேர்வு கட்டணம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும், 7ல் வழங்கப்படும்; தேர்வு முடிவு, 16ல் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.