அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம் ;T.C வாங்குவது குறித்து அண்ணா பல்கலை விளக்கம்

'கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக, டி.சி., வாங்க வேண்டாம்' என, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைசெயலர் விளக்கம் அளித்து உள்ளார்.பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கான, அண்ணா பல்கலை கவுன்சிலிங், ஜூலையில் நடக்கிறது.இதில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று துவங்க உள்ளது.


மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்களில், வரும், 14ம் தேதி வரையும், சென்னை, அண்ணா பல்கலை வளாக உதவி மையத்தில், 17ம் தேதி வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.மற்ற மாவட்டங்களில், 14ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்கள், 17ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்திற்கு வரலாம் என, சலுகை வழங்கப்பட்டுஉள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அதில் கையெழுத்திட்டு, உதவி மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.


10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், டி.சி., என்ற, மாற்று சான்றிதழ், நிரந்தர ஜாதி சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.தேவைப்படுவோர், இருப்பிட சான்றிதழ், இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்று திறனாளர் மற்றும் விளையாட்டு வீரர் சான்றிதழ் ஆகியவற்றை, அசல் சான்றிதழுடன், நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும்.


இதற்கிடையில், கல்லுாரிகளில் தற்காலிகமாக சேர்ந்தவர்கள், டி.சி., எடுத்துச் செல்வது எப்படி என, குழப்பம் அடைந்து உள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கல்லுாரிகளில் ஏற்கனவே சேர்ந்தவர்கள், தற்போது, டி.சி., வாங்க வேண்டாம். சான்றிதழ் நகலுடன், சான்றிதழ் கல்லுாரியில் உள்ளதை உறுதி செய்யும் கடிதத்தை, கல்லுாரி முதல்வரிடம் வாங்கி வந்தால் போதும்.


கவுன்சிலிங்குக்கு பின், இடம் ஒதுக்கப்பட்டு நிரந்தர ஆணை கிடைத்ததும், டி.சி.,யை வாங்கி கொள்ளலாம்; அதுவரை காத்திருப்பது நல்லது.தவிர்க்க முடியாத காரணங்களால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் பங்கேற்க முடியாதவர்கள், அனுமதி கடிதம் கொடுத்து, தங்கள் பெற்றோரில் ஒருவரையோ, உறவினரையோ அனுப்பலாம்.


அவர்கள், மாணவரின் கடிதத்துடன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், வருமான வரி கணக்கு எண் அட்டை போன்றவற்றில், ஒன்றை எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.