பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்?

பள்ளி பணிக்கான சிறப்பு அனுமதி பெறாமல், மாணவர்களை ஏற்றும் தனியார் வாகனங்கள் மீதும், போக்குவரத்து துறை,'கிடுக்கிப்பிடி'போட உள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது, ஆர்.டி.ஓ.,க்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 


பள்ளியின் நேரடி வாகனங்கள் அல்லாமல், தனியார் வாகனங்களும், மாணவர்களை, பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்கின்றன.வரன்முறை இன்றி இயங்கும் இந்த வாகனங்களால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய தனியார் வாகனங்களுக்கும், கிடுக்கிப்பிடி போடும் பணிகளை, போக்குவரத்து துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. இவை, 10 கி.மீ., சுற்றளவில், மாணவர்களை அழைத்து செல்கின்றன. அந்த வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்தும், ஓட்டுனரின் கண்பார்வை, உடல் தகுதி மற்றும் உதவியாளரின் செயல்பாடுகளை ஆராய்ந்தும், தகுதி சான்றிதழை வழங்குகிறோம்; அவற்றில், தவறு ஏற்படாமல் கண்காணித்தும் வருகிறோம். சமீபத்தில், 1,500 வாகனங்களுக்கு மேல், தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன; அவற்றை, சரி செய்ய உத்தரவிட்டு உள்ளோம்.


பள்ளி வாகனங்கள் இல்லாத பள்ளிகளில், ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள் கூடி, பெற்றோரிடம் பேசி, வீடுகளுக்கு சென்று, மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இவர்கள், போக்குவரத்து துறை விதித்துள்ள, பள்ளி வாகன விதிமுறைகளை பின்பற்றாததால், பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். பின், அந்த பதிவுச் சான்றிதழையும், பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தையும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காட்டி, மாணவர்களை ஏற்றிச்செல்ல சான்றிதழ் பெற வேண்டும்.

மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில், பக்கவாட்டு தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும். வேன்களில், மாணவர்களை ஏற்றி, இறக்கி, சாலையை கடக்கவும், பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உதவியாளரை நியமிக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.மாணவர்களை ஏற்றும் வாகனங்களில், 'பள்ளி பணிக்காக' என்ற, 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும். ஒரு பெரியவரை ஏற்றும் வாகனத்தில், 1 : 5 என்ற எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றலாம்; கூடுதலாக ஏற்றக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள்
கூறினர்.