அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முதல் துவங்கியது

அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேற்று முதல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. மாநிலம் முழுவதும், 42 மையங்களில், தினமும், 25 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, நேற்று முதல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்களில், வரும், 14ம் தேதி வரை சரிபார்ப்பு நடக்கிறது. சென்னை அண்ணா பல்கலையில் உள்ள, உதவி மையத்தில் மட்டும், வரும், 17ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.

அண்ணா பல்கலை உதவி மையத்தில், ஒவ்வொரு நாளும், எட்டு கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு கட்டத்திற்கும், பொது பிரிவு மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்கள் என, 350 பேர் வீதம், 2,800 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் மேற்பார்வையில், ஒவ்வொரு மையத்திலும், நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

சென்னை மையத்தில், 300க்கும் மேற்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மாநிலம் முழுவதும், ஒவ்வொரு நாளும், 25 ஆயிரம் பேர் தனித்தனி நேரங்களில் அழைக்கப் பட்டுள்ளனர். இதற்காக, மாணவர்களின் மொபைல் போன் எண், இ - மெயில் முகவரிக்கு தகவல்கள் அனுப்பப் பட்டுள்ளன. ஆன்லைனிலும், தங்கள் பயனாளர் குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

உதவி மையங்களுக்கு வருவோருக்கு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் உண்மையானதா என, ஆய்வு செய்யப்படும். மேலும், சான்றிதழ்களின் நகல்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர, ஒவ்வொரு மாணவரும், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் பிரதி எடுத்து, அதில், ஒரு வண்ண புகைப்படம் ஒட்டி, உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட மாணவர்களுக்கு, 551 கல்லுாரிகளின், மாணவர் எண்ணிக்கை, கட்டணம், விடுதி வசதி, கல்லுாரி குறியீட்டு எண் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய, தகவல் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.


விளையாட்டு பிரிவினர் சென்னைக்கு அழைப்பு:
அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஒரு கல்லுாரிக்கு ஒரு இடம் வீதம், 500 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு விளையாட்டு பிரிவில், 1,662 மாணவியர் உள்பட, 7,004 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, சென்னை அண்ணா பல்கலையில் உள்ள உதவி மையத்தில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து, விளையாட்டு பிரிவினர், சென்னைக்கு வர வேண்டும். அவர்களிடம், அண்ணா பல்கலையில், விளையாட்டு பிரிவு தலைவர், பேராசிரியர் செல்லத்துரை தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், சான்றிதழ்களை சரிபார்த்து மதிப்பெண் வழங்குகின்றனர்.


ஆன்லைன் கவுன்சிலிங் வீடியோ:
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த மாணவர்களுக்கு, உதவி மையத்தில், வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில், ஆன்லைனில் இடங்களை தேர்வு செய்வது எப்படி, கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் மற்றும், கல்லுாரிகளின் குறியீட்டு எண்ணை பதிவு செய்வது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரே பெயரில் உள்ள கல்லுாரிகளை அடையாளம் கண்டு கொள்வது, விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை வீட்டில் இருந்தவாறே கணினியில் உறுதி செய்வது போன்றவை, செய்முறையாக காட்டப்படுகிறது.