பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க நடவடிக்கை'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து, அரசு பள்ளிகளுக்கு வரும் நிலை விரைவில் ஏற்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.



சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - தங்கம் தென்னரசு: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட, காளையார் கரிசல்குளம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர், செங்கோட்டையன்: விதிமுறைகளை அப்பள்ளி நிறைவு செய்யாததால், வாய்ப்பு இல்லை.

தங்கம் தென்னரசு: தொடக்க பள்ளியை, நடுநிலை பள்ளியாக உயர்த்த, மாணவர்கள் எண்ணிக்கை உட்பட, பல விதிமுறைகள் உள்ளன. தற்போது, அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொடக்க பள்ளியிலிருந்து, உயர்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை; உயர்நிலை பள்ளிகளில் இருந்து, மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தபடி உள்ளது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?

அமைச்சர், செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, 14 வகையான கல்வி உபகரணங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் உள்ள வசதிகளை விளக்கி, துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, மாணவர்களை சேர்க்கிறோம்.மொத்தம், 5,600 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு, 'ஸ்மார்ட்' வகுப்பு களாக மாற்றப்பட்டுள்ளன. பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என, நினைத்து, தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அங்கன்வாடி மையங்களில், ஆங்கில வகுப்புகளை துவக்க, ஆலோசனை நடந்து வருகிறது.அங்கு படிக்கும் மாணவர்களை, அப்படியே அரசு பள்ளிக்கு மாற்றவும், அவர்களுக்கு ஆங்கிலத்தை போதிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வித்தியாசம் குறையும்.

தங்கம் தென்னரசு: அரசு பாடத்திட்டங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களில், பாடங்கள் அதிகம் உள்ளன. மொழிப் பாடங்கள் சுமையாக இருக்காமல், சுகமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர், செங்கோட்டையன்: நல்ல ஆலோசனை. இதுவரை, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டன. இதை, 38 ஆண்டுகளுக்கு பின், ஒரு தாளாக மாற்றம் செய்துள்ளோம். ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமை, மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைக்கப்பட்டுஉள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.