நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்கள் போக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் 127 இடங்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவகல்லூரியில் 65 இடங்கள், சுயநிதிகல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689 என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.


அரசு பல் மருத்துவகல்லூரியில் அகில இந்திய இடஒதுக் கீட்டுக்கான 15 இடங்கள் போக 85 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 12 இடங்கள் போக 68 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1,045 இடங்களும் என மொத்தம் 1,198 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

இதில் மருத்துவகல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பெயர் விவரம் மற்றும் ‘நீட்’ தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

அரசு ஒதுக்கீடு

1) கே.கீர்த்தனா, எம்.கே.ரெட்டி தெரு, மேற்கு தாம்பரம், சென்னை. (676)

2) ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக், மல்லபுரம், தர்மபுரி. (656)

3) ஆர்.பிரவீன், தில்லை கங்கா நகர், சென்னை. (650)

4) முகமது சாயீப் ஹசன், டாக்டர் சுப்பராயன் நகர், கோடம்பாக்கம், சென்னை. (644)

5) ராகவேந்திரன், இருக்கம் தெரு, பொன்னேரி தாலுகா, திருவள்ளூர். (626)

6) எஸ்.அரவிந்த், மலயம் பாளையம், திருப்பூர். (625)

7) என்.இ.ஹரி நரேந்திரன், மேற்கு தில்லை நகர், திருச்சி. (625)

8) சி.ஆர்.ஆர்த்தி சக்திபாலா, ராம்நகர், மகாராஜாநகர் போஸ்ட், நெல்லை. (623)

9) எந்தூரி ருத்விக், மாடம்பாக்கம் மெயின்ரோடு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை. (621)

10) யு.எம்.ரவி பாரதி, உப்புக்கரை பள்ளம், பவானி தாலுகா, ஈரோடு. (617)

சுயநிதி மருத்துவகல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக் கான தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர் களின் பெயர் விவரம் மற்றும் நீட் தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

1) அமிதாப் பங்கஜ் சவுகான், அகமதாபாத், குஜராத். (670)

2) அர்ஜூன் சரஸ்வத், லக்னோ, உத்தரபிரதேசம். (669)

3) ஜெஸ் மரியா பென்னி, எர்ணாகுளம், கேரளா. (664)

4) ராஜ் செந்தூர் அபிஷேக், மல்லபுரம், தர்மபுரி. (656)

5) ஆபாஷ் கட்லா, பிரஜாபத் காலனி, பதிந்தா. (651)

6) பிரணவ் போஸ் பவனாரி, குகத்பள்ளி, ஐதராபாத், தெலுங்கானா. (650)

7) ஆர்.பிரவீன், தில்லை கங்கா நகர், திருச்சி. (650)

8) ரிச்சு கே.கோகாத், கோட்டையம், கேரளா. (650)

9) எஸ்.பட்டாச்சார்ஜீ, அகர்தலா, மேற்கு திரிபுரா (649)

10) சாய் சுப்ரியா ஜங்கலா, வெங்கராஜூ நகர், தொந்தபார்க், விசாகப்பட்டினம். (646)

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களிடம் இருந்து 28 ஆயிரத்து 67 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. அதில் 181 மாணவர்களிடம் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 469 விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 25 ஆயிரத்து 417 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சிறப்பு பிரிவு விண்ணப்பங்களாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில்(மொத்த இடங்களில் 5 சதவீதம் ஒதுக்கீடு) 26 விண்ணப்பங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில்(மருத்துவபடிப்பு 7 இடங்கள், பல் மருத்துவம் ஒரு இடம்) 284 விண்ணப்பங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவில்(மருத்துவபடிப்பு 10 இடங்கள், பல் மருத்துவம் ஒரு இடம்) 469 விண்ணப்பங்களும் பெறப்பட்டு இருக்கின்றன.

வருகிற 1-ந்தேதி(ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி 10-ந்தேதி வரை மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக் கான கலந்தாய்வும், 2-ந்தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

இந்த ஆண்டை பொறுத்தவரையில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதேபோல், நம்முடைய இடங்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. 3 தனியார் மருத்துவகல்லூரிகளின் அங்கீகாரம் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருக்கிறது. அங்கு சேர்க்கை கூடாது என்று கூறி இருக்கிறார்கள். அதை பின்பற்றுவோம்.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட அதே இடங்களை மீண்டும் பெற்று இருக்கிறோம். வரும் ஆண்டில் கரூர் உள்பட 3 மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்க இருக்கிறது. கட்டணம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்து இருக்கிறது. அந்த குழு நிர்ணயித்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இரட்டை இருப்பிட சான்றிதழ், போலி சான்றிதழ் சமர்பிக்கப்படுவதை தடுக்க இந்த ஆண்டு விதியை கடுமையாக பின்பற்றுவோம். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கோ, வேறு மாநிலத்தில் விண்ணப்பித்தவர்கள் தமிழக இடங்களுக்கோ விண்ணப்பிக்க முடியாது. சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதல் முறையாக வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் விவரம் சென்னை முதலிடம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் மாவட்டம் வாரியாக கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களின் விவரம் வருமாறு. 

அரியலூர் - 316, சென்னை - 2,939, கோவை - 1,158, கடலூர் - 792, தர்மபுரி - 737, திண்டுக்கல் - 541, ஈரோடு - 769, காஞ்சீபுரம் - 1,390, கன்னியாகுமரி - 975, கரூர் - 343, கிருஷ்ணகிரி - 716, மதுரை - 1,251, நாகப்பட்டினம் - 297, நாமக்கல் - 676, நீலகிரி - 148, பெரம்பலூர் - 211, புதுக்கோட்டை 423, ராமநாதபுரம் - 350, சேலம் - 1,317, சிவகங்கை - 373, தஞ்சாவூர் - 750, திருவள்ளூர் - 1,344, திருச்சி - 1,144, திருவண்ணாமலை - 587, தூத்துக்குடி - 646, தேனி - 414, நெல்லை - 1,155, திருவாரூர் - 204, திருப்பூர் - 659, வேலூர் - 1,256, விழுப்புரம் - 839, விருதுநகர் - 589. மேலும் அண்டை மாநிலங்களான கேரளா - 52, கர்நாடகா - 4, ஆந்திரா - 18, இதர பகுதிகள் - 34. இதில், சென்னை முதலிடம் பிடித்து இருக்கிறது.

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர்ந்து படிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் வருமாறு.

அரசு கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் படிப்பதற்கு ரூ.13 ஆயிரத்து 600-ம், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க ரூ.11 ஆயிரத்து 600-ம், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் படிக்க ரூ.6 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 370-ம், பி.டி.எஸ். படிப்புக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.