வேளாண் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பு!!!

 ''வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைவரும், 'ஆன்லைன்' கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது,'' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 14 உறுப்பு கல்லுாரிகள், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


நடப்பு கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே 18ல் துவங்கி ஜூன், 17ல் முடிந்தது. 3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 32 ஆயிரத்து, 561 விண்ணப்பங்கள் மட்டுமே, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதால், ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.ஜூன், 22ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூலை, 9ல், ஆன்லைன் கலந்தாய்வு துவங்க உள்ளது.

பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது: பல்கலை கொடுத்துள்ள வழிகாட்டும் கையேட்டை, பலர் சரியாக படிக்கவில்லை. இதனால், ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ததில், பலர் தவறு செய்துள்ளனர். மாணவர் பெயர், பாலினம் கூட தவறாக உள்ளது. விண்ணப்பத்தை மாணவர்களே பூர்த்தி செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சென்டரில் கொடுத்து, பூர்த்தி செய்வதால், இதுபோன்ற தவறுகள் ஏற்படுகின்றன. பிழையான விண்ணப்பங்களை சரி செய்யும் பணி நடக்கிறது.

விண்ணப்பித்த அனைவரும், ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு இடத்துக்கு, ஐந்து பேர் என்ற கணக்கில், மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.கலந்தாய்வின் போது, ஏற்கனவே தேர்வு செய்த பாடம் மற்றும் கல்லுாரிகளை, மாணவர்கள் மாற்ற விரும்பினால், மாற்றிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.