அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய உத்தரவு

அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்ததில், குறைபாடுகள் உள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, சென்னையில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு, கட்டங்கள் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த ஆலோசனைக்கு பின், பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாவட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், கூறப்பட்டுள்ளதாவது:உதவி பொறியாளர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, தங்கள் எல்லையில் உள்ள அரசு கட்டடங்களை, நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, பார்வை குறைபாடு மற்றும் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இருவரை உடன் அழைத்து செல்ல வேண்டும். குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை விரைந்து தீர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.