மலை கிராம மக்கள் போராட்டம் தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

ஜமுனாமரத்துார்:பள்ளிக்கு சரிவர வராத தலைமை ஆசிரியர், ஜவ்வாது மலைக் கிராம மக்களின் போரா ட்டத்தால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள, முட்நாட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக, ரவி என்பவர் பணியாற்றினார். இவர், பள்ளிக்கு சரிவர வருவதில்லை எனக்கூறி, ஆறு மாதங்களுக்கு முன், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் போராட்டம் நடத்தினர். 



வட்டார கல்வி அலுவலர், கோவிந்தராஜ் விசாரித்து, ஜன., 18ல், ரவி கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டார். கடந்த வாரம், கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த நிலையில் பணிக்கு, ரவி சென்றார். 


மீண்டும், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பிள்ளைகளை, பள்ளிக்கு அனுப்பவில்லை.இதுகுறித்து, போளூர் மாவட்ட கல்வி அலுவலர், ராஜேந்திரன், ஜமுனாமரத்துார் வட்டார கல்வி அலுவலர், கோவிந் தராஜ் ஆகியோர், பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.அப்போது, ரவியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, தலைமை ஆசிரியர் ரவியை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதாக, கிராம மக்கள் கூறினர்.