அம்மா கல்வியக 'நீட்' பயிற்சி: 2,705 பேர் தேர்ச்சி

'அம்மா' கல்வியகத்தில் இலவசமாக, 'நீட்' தேர்வு கையேட்டை பதிவிறக்கம் செய்து படித்தவர்களில், 2,705 பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் செயலர், அஸ்பயர் சுவாமிநாதன், 'அம்மா கல்வியகம்' என்ற, கல்வி இணையதளத்தை உருவாக்கினார். இதை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு, ஜெ., பிறந்த நாளில் துவக்கி வைத்தார்.



இந்த இணையளத்தில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இணையதளத்தில், 18.50 லட்சம் பேர், உறுப்பினர்களாக சேர்ந்தனர்.


அம்மா கல்வியகம் சார்பில், மார்ச், 23ல், 'நீட்' தேர்வுக்கான இலவச கையேடு வெளியிடப்பட்டது. இதை, 63 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்தனர். சமீபத்தில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில், அம்மா கல்வியகத்தில், இலவச கையேடை பதிவிறக்கம் செய்து படித்த, 2,705 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 55 பேர், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தை சேர்ந்த டெய்லர் மகள் அனிதா என்பவர், இதை மட்டும் படித்து, 337 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என, அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.