புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. 


பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன.

இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.

''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.