புதிய பிளஸ் 1 புத்தகம்: 'டிஜிட்டல்' வடிவில் வெளியானது

புதிய பாடத்திட்டத்தில், கண்கவர் படங்கள், தகவல்களுடன், பிளஸ் 1 பாட புத்தகம், ஆன்லைனில், டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறையில், 13 ஆண்டுகளாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தது. இதனால், தமிழக மாணவர்கள், பிளஸ் 2 முடித்ததும், போட்டி தேர்வுகளில், நவீன தொழில்நுட்ப கேள்வி களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.


இதன்படி, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், ஒன்று, ஆறு, ஒன்பது வகுப்புகளுக்கான, புதிய பாடத்திட்ட புத்தகங்கள், அனைத்து பள்ளி களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. 


பிளஸ் 1 புத்தகத்தில் மட்டும், பிழைகள் இருந்த தால், அவற்றை சரிசெய்யும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், பிழைகள் சரிசெய்யப்பட்ட, புதிய பாடத்திட்ட புத்தகம், தமிழக பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in என்ற, இணையதளத்தில், டிஜிட்டல் வடிவில்வெளியிடப்பட்டுள்ளது.


தனியார் பள்ளிகளில், ஒரு வாரத்திற்கு முன், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. சில அரசு பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கியுள்ளதால், மாணவர்களின் வசதிக்காக, பிளஸ் 1 புத்தகத்தை, ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 


இந்த புத்தகத்தை, ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய புத்தகத்தில், தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள், தனித்தனி புகைப்படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.கண்ணை கவரும் வண்ணங்களில் படங்கள், பார்கோடு மற்றும் இணையதள இணைப்புகள் புத்தகங்களில் அச்சிடப்பட்டு உள்ளன. 
மேலும், போட்டி தேர்வு வினாக்கள், உயர்கல்வி படிப்புகள், வேலைவாய்ப்பு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 1 புத்தகம், வரும், 11ம் தேதி முதல், தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. தனியார் பள்ளிகள் மொத்தமாக, 'ஆர்டர்' செய்து, பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks